Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rains | வேலூரில் பயங்கரம்… வீட்டின் மீது ராட்சத பாறை விழுந்ததில் தாய், மகள், பரிதாபமாக உயிரிழப்பு!

பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மண்ணில் புதையுண்டு இருந்த ரமணி உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

The giant rock fell on the house killed mother and daughter in vellore
Author
Vellore, First Published Nov 15, 2021, 8:55 AM IST

பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மண்ணில் புதையுண்டு இருந்த ரமணி உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில், வெள்ள பாதிப்புகள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை குறைந்திருந்த நிலையில் நேற்று பிற்பகலில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்தநிலையில் நேற்று மாலை மூன்று மணி அளவில் காகிதப்பட்டறை மலையில் 50 அடி உயரம் கொண்ட ராட்சத பாறை திடீரென மலை அடிவாரத்தில் இருந்த வீட்டின் மீது சரிந்து விழுந்தது. அப்போது வீட்டிற்குள் இருந்த ரமணி மற்றும் அவரது மகள் நிஷா இருவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

The giant rock fell on the house killed mother and daughter in vellore

இடிபாடுகளில் சிக்கி அலறியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்க முயற்சித்தனர். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்காததால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலிசார், தாய், மகளை காப்பாற்ற போராடினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோரும், இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்கும் பணிகளை துரிதப்படுத்தினர்.  காவல் துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் நேரடியாக களத்தில் இறங்கி தீயணைப்புப் படை வீரர்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார்.

சுமார் மூன்று மணி நேர  போராட்டத்திற்குப் பின்பு படுகாயங்களுடன் ரமணி, மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ரமணியின் மகள் நிஷாந்தி என்ற நிஷாவை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதனிடையே அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இரண்டு குழுக்களாக சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்புப் படையினர் நிஷாவை மீட்கும் முயற்சியில் களமிறங்கினர்.

The giant rock fell on the house killed mother and daughter in vellore

கட்டட இடிபாடுகளை அகற்ற சமப்வ இடத்திற்கு ராட்சத பொக்கலைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கிய நிஷாவை கண்டறிய இரண்டு மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இறுதியாக ஒன்பது மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் நிஷா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ராட்சத பாறை விழுந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. சில இடங்களில் சூறைக்காற்று வீசுவதாலும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. வீடுகளிலும் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளன. மழைநீர் தேங்கி நிற்பதால் மின்சாரம் தொடர்பான விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. பருவமழை முடியும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப் பணி துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் தருமபுரி அருகே ரயில் மீது பாறைகள் சரிந்து விழுந்ததில் கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேதமடைந்தது. அதேபோல், பர்கூர் அருகே மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் கர்நாடகா உடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் பாறைகள் வெடிவைத்து அகற்றப்பட்டன. இந்தநிலையில் வேலூரில் பாறை விழுந்து தாய், மகள் உயிரிழந்துள்ளனர். மலைத்தொடர் ஓரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios