வகுப்பறையில் பாடம் நடத்தாமல் படுத்து தூங்கிய ஆசிரியர்..! வைரலாக பரவிய வீடியோ..!
ராணிப்பேட்டை அருகே வகுப்பறையில் பாடம் நடத்தாமல் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் படுத்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே இருக்கிறது கன்னிகாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் இருக்கும் அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக சிவகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். உதவி ஆசிரியராக மோகன் பணியில் இருக்கிறார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக உதவி ஆசிரியர் மோகன் வகுப்பறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் போர்வையை விரித்து களைப்பு நீங்க துங்கியுள்ளார். அதை அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட, அது வைரலானது. இதையடுத்து இந்த சம்பவம் மாவட்ட கல்வி அதிகாரி கவனத்திற்கு சென்றது. உடனடியாக விசாரணை மேற்கொள்ளும்படி அவர் வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்து அதிகாரிகள் விசாரணை மேகொண்டனர். தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், கிராம மக்கள் என பலரிடமும் விசாரித்தனர். அனைவருமே மோகன் நன்றாக பாடம் எடுப்பார் என்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் வகுப்பறையில் படுத்து ஓய்வெடுத்தார் என்றனர். அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான அறிக்கை மாவட்ட கல்வி அதிகாரியிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.