திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர், அதன்மீது போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து புகார் தாரரிடம் கருத்துக் கேட்கும் நடைமுறையை அம்மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தொடங்கியுள்ளார். புகார் தாரர் கூறும் கருத்தின் அடிப்படையில் வழக்கை கையாண்ட போலீஸ் அதிகாரிக்கு வாழ்த்துகள் அல்லது முறையான அறிவுரைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் காவல் துறையில் உள்ளவர்கள் மக்களிடம் இன்னும் நெருக்கமாக இருந்து தங்களது கடமைகளை இன்னும் மேம்பட செய்ய முடியும் என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இந்திய ஐபிஎஸ் சங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் பகிரப்பட்டது. இந்நிலையில், இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 'சிறப்பான இந்த அசத்தல் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

ரெய்னாவின் இந்தப் பாராட்டு நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கும் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.