மொத்தமாய் அள்ளி கொடுத்த ஐ.பி.எஸ். அதிகாரி.... குவியும் பாராட்டுக்கள்...!
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தனது ஒரு மாத ஊதியமான ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 572 ரூபாயை மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினிடம் வழங்கியுள்ளார்.
வல்லரசு நாடுகளை திணற வைக்கும் கொரோனாவால் இந்தியா கடும் நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்ட்ரா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன. ஆனால் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தொழிற்சாலைகள் செயலற்று காணப்படுகின்றன.
கொடிய கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குமாறு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன்படி பல்வேறு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் நிதியை வாரி வழங்கி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. ராணிபேட்டை மாவட்டத்தின் முதல் காவல்துறை கண்காணிப்பாளராக பதவியேற்றவர் மயில்வாகனன். அந்த மாவட்டத்தில் மணல் திருட்டு, சூதாட்டம் உள்ளிட்ட அனைத்து விதமான சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளையும் சிறப்பாக கையாண்டு வருகிறார்.
ஊரடங்கு உத்தரவை சீராக நடைமுறைப்படுத்துவதற்காக காவலர்கள் 24 மணி நேரமும் வெயில், மழையையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர். அந்த உன்னதமான பணி மட்டும் போதாது என்று முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் உதவி வருகின்றனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தனது ஒரு மாத ஊதியமான ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 572 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினிடம் வழங்கியுள்ளார். தனது முழு மாத சம்பளத்தையும் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்த கண்ணியம் தவறாத காவலர் மயில்வாகனனுக்கு பாரட்டுக்கள் குவிகின்றன.