Asianet News TamilAsianet News Tamil

நாங்க பட்ட கஷ்டத்துக்கு இப்போதான் பலன் கிடைச்சிருக்கு.... பயங்கர குஷியில் கெத்து காட்டும் ராமதாஸ்!!

வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். பா.ம.க.வின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும், வேலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை மதித்தும் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.

ramadoss proved split vellore 3 district
Author
Chennai, First Published Aug 15, 2019, 3:53 PM IST

வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். பா.ம.க.வின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும், வேலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை மதித்தும் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய விடுதலை நாளையொட்டி சென்னை கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வேலூர் மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை எவ்வளவு நியாயமானது? அதை நிறைவேற்றிய அரசின் நடவடிக்கை எந்த அளவுக்கு சரியானது? என்பதற்கு வேலூர் மாவட்ட மக்கள் அடைந்திருக்கும் உற்சாகம் தான் சாட்சியம் ஆகும்.

தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவும், மக்கள்தொகையும் கொண்ட மாவட்டம் வேலூர் தான். வேலூர் மாவட்டத்தில் 39.36 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அம்மாவட்டத்தில் 13 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. வேலூர் மாவட்டத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு செல்ல 220 கி.மீ. பயணிக்க வேண்டும். மாவட்டத்தின் எந்த எல்லையிலிருந்து வேலூருக்கு செல்வதாக இருந்தாலும் குறைந்தது 100 கி.மீ கடக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், உலகின் 101 நாடுகள் வேலூர் மாவட்டத்தை விட சிறியவை ஆகும். இந்த காரணங்களின் அடிப்படையில் தான் வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. இதற்காக கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான போராட்டங்களை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. அவற்றுக்கு இப்போது பயன் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு வேலூர் மாவட்ட மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் மட்டும் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இது போதுமானதல்ல. மாறாக, தமிழகத்தின் நிலப்பரப்பை நிர்வாக ரீதியாக சீரமைப்பதற்கு இது ஒரு நல்லத் தொடக்கமாகும். திருவள்ளூர், சேலம், கோவை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களும் 30 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்கள் ஆகும். அதேபோல், தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஈரோடு கடலூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் மக்கள்தொகை 20லட்சத்துக்கும் கூடுதல் ஆகும். நிர்வாக வசதிக்காக இந்த மாவட்டங்களும் பிரிக்கப்படுவது தான் சரியானதாக இருக்கும்.

நாகை மாவட்டத்தின் நிலப்பரப்பு புதுவை யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்காலின் இருபுறமும் பரந்து கிடக்கிறது. மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் நாகைக்கு செல்ல காரைக்காலை கடந்து செல்வதில் பல சிரமங்கள் இருப்பதால் நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து, மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளும் தமிழக அரசால் கனிவுடன் பரிசீலிக்கப்பட வேண்டும்.

நான் மீண்டும், மீண்டும் கூறி வருவதைப் போல தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களையும் மறுவரையறை செய்வது தான் சிறந்த நடவடிக்கையாக இருக்கும். தெலுங்கானாவில் அவ்வாறு தான் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. ஆந்திராவிலும் அவ்வாறு தான் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படவுள்ளன. அதேபோல், தமிழகத்திலும் மக்கள்தொகை அடிப்படையில் மாவட்டங்களைப் பிரிக்க தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios