கடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
புயல் காரணமாக மீனவர்கள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், லட்சத்தீவு குமரிக் கடல், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெயிலின் வெப்பத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். வெயில் கடுமையாக இருந்த போதும் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மாலை புயலாக மாறியது.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் இந்த புதிய புயலுக்கு ஆம்பன் என இந்திய வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது.
மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா நோக்கி நகர இருக்கும் ஆம்பன் புயல் வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம் - வங்காளத்தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் இருந்து சுமார் 670 கிமீ தொலைவிலும், புவனேஸ்வரிலிருந்து தெற்கே 1160 கிமீ, கொல்கத்தாவிலிருந்து 1400 கிமீ தெற்கு தென் மேற்கு திசையிலும் நிலை கொண்டிருக்கும் இப்புயல் தற்போது வடக்கு வடமேற்கு திசையில் 16 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தின் கடலோர உள் மாவட்டங்ளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மாலை மழை பெய்யக்கூடும். புயல் காரணமாக மீனவர்கள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், லட்சத்தீவு குமரிக் கடல், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேரடியாக மழைக்கு வாய்ப்பில்லை எனவும் புயல் விலகிச் செல்லும் காரணத்தால் கடலோர மாவட்டங்களில் வெப்ப நிலை உயரும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.