தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது. கடந்த இரண்டு மாதமாக பெரும்பாலான இடங்களில் பருவ மழை கொட்டித்தீர்த்ததை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்தது. மாநிலத்தின் பிரதான அணைகள் பல நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேட்டூர் அணை இந்த வருடத்தில் மட்டும் நான்கு முறை நிரம்பியுள்ளது. நெல்லை மாவட்டம் காரையார் அணை நிரம்பி தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் மழை ஓய்ந்திருக்கிறது. எனினும் தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடிக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெறிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூண்டியில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இதனிடையே தலைநகர் சென்னையில் இந்த வருடம் பருவமழை 13 சதவீதம் குறைவாக பெய்திருப்பதாக வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.