அண்மையில் பாராளுமன்றத்தில் குடியுரிமை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. மாணவர் அமைப்புகளும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராடி வருகின்றனர். டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து பலர் தாக்கப்பட்டனர். அதை எதிர்த்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது.

தமிழகத்திலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக 23ம் தேதி மாபெரும் பேரணி நடக்க இருக்கிறது. இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி சார்பற்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இஸ்லாமிய இயக்கங்கள் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இஸ்லாமிய அமைப்புகள் என பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் 2000 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் திரண்டனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரம் போலீசாருக்கு மேல் வாணியம்பாடியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்களையும் இலங்கை தமிழர்களையும் புறக்கணித்ததை கண்டித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் கூடியவர்கள் முழக்கமிட்டனர்.