ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலையில் 40 பெண்களை கொண்டு காலணி தயாரித்த தொழிற்சாலைக்கு அம்மாவட்ட ஆட்சியர் அதிரடியாக சீல் வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் பரவாமல் இருக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெளியே சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் உள்ளதால் எந்த தொழிற்சாலைகளையும் திறக்கக்கூடாது என அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டையில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் சில கம்பெனிக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி சிறப்பு அனுமதி வழங்கியுள்ளார். இதில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற அத்யாவசிய தொழிற்சாலைகள் மட்டும் குறைந்தபட்ச தொழிலாளர்களை கொண்டு பணி செய்து வருகின்றன.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஒரு தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் முக கவசம் செய்து தருவதாக அனுமதி பெற்றனர். அந்த தொழிற்சாலை முககவசம் தயாரிக்க 10 பெண் தொழிலாளர்களை கொண்டு மட்டும் முக கவசம் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு 40 பெண்கள் தொழிலாளர்களை காலணி தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தொடர்பாக புகார் சென்றது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சி தலைவர் திவ்யதர்ஷினி அந்த தொழிற்சாலையை மூடி சீல் வைக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதையடுத்து நேரில் சென்று சீல் வைத்தனர்.