Asianet News TamilAsianet News Tamil

பேரறிவாளனுக்கு தாராளம் காட்டும் தமிழக அரசு..! விடுதலை எப்போது..?


தந்தையை கவனித்து கொள்வதற்காக பரோலில் வெளிவந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

perarivazhan's barol period extended
Author
Jolarpettai, First Published Dec 13, 2019, 12:49 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7 பேர் விடுதலைக்கான நகர்வை சட்டமன்றத்தில் முன்னெடுத்தார். 

perarivazhan's barol period extended

அவர் மறைவுக்கு பிறகு தற்போதைய அதிமுக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இப்போது வரையிலும் எந்த முடிவையும் ஆளுநர் அறிவிக்கவில்லை. இந்தநிலையில் தந்தையின் உடல்நிலையை கவனித்து கொள்வதற்காக பேரறிவாளன் ஒரு மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம் 12 ம் தேதி சிறையில் இருந்து வெளிவந்த அவர் ஜோலார்பேட்டையில் இருக்கும் தனது வீட்டில் தங்கியிருந்தார். 

perarivazhan's barol period extended

தந்தையின் உடல்நிலையை கவனித்து கொண்டு மருத்துவமனைக்கும் அழைத்து சென்று வந்தார். இடையில் அவரது சகோதரி மகளின் திருமணம் கிருஷ்ணகிரியில் நடைபெறவே அங்கும் சென்று குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவரது ஒரு மாத பரோல் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மேலும் ஒருமாதம் பரோலை நீடித்து தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற தமிழக அரசு, இன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு பரோலை நீடித்து உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் எந்த விதமான கூட்டங்களில் கலந்து கொண்டு பேச கூடாது, பேட்டி அளிக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios