வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி வேளாங்கண்ணி(39). இந்த தம்பதியினருக்கு ஷாலினி என்கிற மகள் இருக்கிறார். மூவரும் தோட்டப்பாளையத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வருகின்றனர். ஆரோக்கிய தாஸ் அந்த பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே வேளாங்கண்ணிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறது. இதன்காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த வேளாங்கண்ணி, மூளைச்சாவடைந்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து ஆரோக்கியதாஸும் ஷாலினியும் கதறி துடித்தனர். அவர்களை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றினர்.

மனைவி இறந்த மீளாத துக்கத்திலும் ஆரோக்கியதாஸ் திடமான முடிவெடுத்தார். உயிரிழந்த தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்த அவர், அது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். மனைவி தான் உயிரிழந்ததாகவும் அவரது உடலுறுப்புகளாவது உயிர் வாழட்டும் என்று அவர் உருக்கத்தோடு கூறியிருக்கிறார். அவரின் விருப்பப்படி வேளாங்கண்ணியின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. வேலூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிறுநீரகமும் சென்னையில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு இதயமும் வழங்கப்பட்டிருக்கிறது.

மனைவி உயிரிழந்த சோகத்திலும் உடலுறுப்புகளை தானம் அளிக்க முன்வந்த ஆரோக்கியதாசை அனைவரும் நெகிழ்ந்து பாராட்டினர்.