தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுமுதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக முக்கிய அணைகள் பல வேகமாக நிரம்பின. தமிழகத்தின் பிரதான அணையான மேட்டூர் அணை கடந்த வருடம் மட்டும் நான்குமுறை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடையும் தருவாயில் இருந்த பருவ மழை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்தது. கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நாகப்பட்டினம் உட்பட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை நிறைவடைவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறும்போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்திருப்பதாக கூறியிருக்கிறார்.

வழக்கமாக 445.7 சதவீதம் பருவமழை காலத்தில் பெய்யும் எனவும் தற்போது அது 453.5 மில்லிமீட்டர் அளவில் பெய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது இயல்பை விட இரண்டு சதவீதம் அதிகமாகும். 32 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகம் காணப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் பருவமழை 64 சதவீதம் அதிகம் பெய்திருக்கிறது. ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலியில் 45 சதவீதமும், தூத்துக்குடியில் 31 சதவீதமும் மழை அதிகரித்துள்ளது. அதே போல பல மாவட்டங்களில் போதுமான மழை பெய்யவில்லை.

மதுரை,பெரம்பலூர்,வேலூர்,திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகவும் குறைவான அளவில் மழை பதிவாகி இருக்கிறது. சென்னையிலும் 24 சதவீதமளவிற்கு மழை குறைவாக பெய்துள்ளது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை வரும் 9ம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது.