வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே இருக்கிறது மேல்விஷாரம் நகரம். இந்த ஊரின் அருகே தஞ்சாவூரான் காலனியில் சிலர் இன்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது  கழிவு நீர் செல்லும் ஓடையில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அதன் அருகே சென்று பார்த்துள்ளனர். அங்கு தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் பச்சிளம் பெண் குழந்தை சடலமாக கிடந்தது.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆற்காடு காவலர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் குழந்தையை வீசிச் சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

தகாத உறவினால் பிறந்ததால் வீசப்பட்டதா அல்லது பெண்குழந்தை என்பதால் நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.