நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதே போல திருநெல்வேலி மாவட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி என உருவாக்கப்பட்டது. 

மாவட்டங்களுக்கான தொடக்க விழா முதல்வர் தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் பழனிசாமி மாவட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கிறது. துணை முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு தாலுகாக்களும் இரண்டு வருவாய் கோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 22 ம் தேதி தென்காசி மாவட்டத்தை தொடங்கி வாய்த்த முதல்வர் முதல்வர் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கி வைத்தார். பின் இன்று காலையில் வேலூரில் இருந்து பிரிக்கப்பட்டிருந்த திருப்பத்தூர் மாவட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.