திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கிறது நெக்னாமலை கிராமம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 அடி உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலை மீது அமைந்திருப்பதால் கடந்த பல வருடங்களாக கிராமத்தில் முறையான சாலை வசதி, மின்சார வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கல்வி என எதுவும் நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறது. மழை பெய்யும் போது அதன் மூலம் உருவாகும் சாலையைத் தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், அரசு கொடுக்கும் ரேசன் பொருட்கள், பொங்கல் பரிசுகள் போன்றவற்றை கழுதை மீது ஏற்றி தான் கொண்டு செல்ல வேண்டும். 

மேலும் கிராமத்தைச் சேர்ந்த யாராவது வெளியூர்களில் இறந்து விட்டால் அவர்களின் உடலை மலை அடிவாரத்தில் இருந்து தொட்டிலில் வைத்தே மேலே தூக்கி செல்ல வேண்டும். கர்ப்பிணி பெண்களை பிரசவத்திற்காக நகர மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லவும் இதே அவல நிலை தான் நீடிக்கிறது. மலையிலிருந்து இறங்கி ஏறுவதற்கு சுமார் 5 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் நெக்னாமலை கிராமத்தையும் முடக்கிப் போட்டுள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கால் அக்கிராம மக்களும் வேலைக்கு செல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க சிரமப்பட்டு அவதியடைந்தனர்.

இதையடுத்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வணிகவரித் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி நெக்னாமலை கிராம மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி நேரடியாகவே செல்ல முடிவெடுத்தார். அதனடிப்படையில் அமைச்சர் வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், அரசு அதிகாரிகள், காவலர்கள், மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் நெக்னாமலை கிராமத்திற்கு நிவாரணப் பொருட்களுடன் சென்றுள்ளனர். சுமார் 20 பேர் அடங்கியிருக்கும் இக்குழுவினர் 10 கிலோமீட்டர் தூரம் நடைபயணமாக சென்று நெக்னாமலை கிராமத்தில் நிவாரப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.