ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் சண்முகம்(38). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா, அங்கிருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக கணவருடன் இருசக்கர வாகனத்தில் ராதிகா சென்று கொண்டிருந்தார். ஆற்காடு அருகே வந்த போது அவர்களுக்கு முன்னால் முரளி(30) என்பவர் தனது மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த முரளி நாட்டுத் துப்பாக்கி வைத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் நாட்டுத் துப்பாக்கியை பின்னோக்கி வைத்தவாறு சென்று கொண்டிருந்த நிலையில் வேகத்தடை ஒன்றில் வாகனம் ஏறி இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக முரளி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதில் இருந்து குண்டுகள் சரசரவென வெளிவந்து பின்னால் வந்து கொண்டிருந்த சண்முகத்தின் மீது பாய்ந்தது.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அந்த  பகுதியில் இருந்தவர்கள் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் முரளியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அவருக்கு நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதி இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.