காட்பாடியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தந்தை, 2 குழந்தைகளை இழந்த தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையம் அருகே மோகன் ரெட்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல மோகன் பட்டாசு கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார். அப்போது சிலர் பட்டாசு வாங்க வந்தனர். குடோனில் இருந்த பட்டாசுகளை எடுத்து வந்து வாடிக்கையாளர்களுக்கு மோகன் காண்பித்தார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில், மளமளவென்று வெடித்து தீ பட்டாசு குடோன் முழுவதும் பரவியது.

பட்டாசு குடோனில் மோகனின் 2 பேரப்பிள்ளைகள் இருந்ததால் அவர்களை காப்பாற்ற மோகன் அங்கு ஓடினார். அதற்குள் குடோன் முழுவதும் தீ பரவி பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் குடோனில் சிக்கியவர்கள் வெளியே வராமல் உள்ளே மாட்டிக் கொண்டனர். இதில், 3 பேரும் உடல் சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்நிலையில், 2 குழந்தைகளை இழந்த தாய் வித்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். கணவரும் பிரிந்து சென்றுவிட்டார். தந்தை, மகன்களும் இறந்து விட்டனர். இதனால் வித்யா கடும் சோகத்திலும் விரக்தியிலும் இருந்துள்ளார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் இன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றார். அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் சென்ற அவர் வேகமாக வந்த ஒரு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வித்யா வீட்டில் இல்லாததால் பதற்றமான உறவினர்கள் அவரை தேடினர்.

அப்போது லத்தேரி ரயில் நிலையம் அருகே பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொது மக்கள் கூறினர். உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்துகிடந்தது வித்யா என தெரியவந்தது. அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதனையடுத்து, அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு வெடி விபத்தால் தந்தை, குழந்தைகளை இழந்த பெண் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.