வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே இருக்கும் மல்லாண்டியூரைச் சேர்ந்தவர் சென்றாயன்(25). வெல்டிங் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கும் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த வரலட்சுமி(19) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

சென்றாயன் அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரிகிறது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். திருமணமான சில நாட்களிலேயே கணவர் இவ்வாறு நடந்து கொள்கிறாரே என்று வரலட்சுமி வேதனையில் இருந்திருக்கிறார்.

சம்பவத்தன்றும் மது அருந்தி விட்டு வந்து சென்றாயன் வீட்டில் சண்டை போட்டிருக்கிறார். இதனால் வெறுப்படைந்த வரலட்சுமி அந்த பகுதியில் இருக்கும் 25 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வரலட்சுமியின் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வரலட்சுமியின் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான சில நாட்களிலேயே வரலட்சுமி தற்கொலை செய்துகொண்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உதவி ஆட்சியர் பிரியங்கா உத்தரவிட்டுள்ளார்.