துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரி இளைஞர்கள்..! தகுதியற்றவர்கள் என தடுத்த அதிகாரிகள்...!
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் விடுதிகளில் காலியாக இருக்கும் சமையல், துப்புரவு பணிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதை பெறுவதற்காக ஏராளமான பட்டதாரிகள் திரண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக 50க்கும் மேற்பட்ட உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சமையல் மற்றும் துப்புரவு பணிக்கு பணியிடங்கள் காலியாக இருந்துள்ளது. இதையடுத்து 112 சமையலர் மற்றும் 27 துப்புரவு பணியாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டிருந்தது.
இந்த பணிக்கு 35 வயதிற்கு உட்பட்ட நன்கு சமைக்கத் தெரிந்த 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை 10 மணிக்கு விண்ணப்பங்கள் வழங்குவது தொடங்கப்பட்டது. இதற்காக காலை 9 மணி முதலே விண்ணப்பங்களை பெறுவதற்காக பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் திரண்டனர், அதில் பட்டதாரிகள் மற்றும் பொறியியல் முடித்த இளைஞர்கள் தான் அதிக அளவு வந்திருந்தனர். நீண்ட வரிசையில் வெகு நேரம் அவர்கள் விண்ணப்பங்கள் வாங்க காத்திருந்தனர்.
இந்த நிலையில் பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலாது என்று அதிகாரிகள் தடுத்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதைத்தொடர்ந்து ஆதிதிராவிட நலத்துறை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் 10,11,12 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படாது என்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே இந்த பணிக்கு தகுதி உடையவர்கள் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.
சமையல் மற்றும் துப்புரவு பணிக்கு விண்ணப்பம் வாங்க பட்டதாரி இளைஞர்கள் ஏராளமானோர் குவிந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.