தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை ஜனவரி 10ம் தேதியுடன் நிறைவடைந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்த போதும் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவான அளவில் மழை பதிவாகியிருக்கிறது. இதனால் வரும் கோடைகாலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பருவ மழை நிறைவடைந்து விட்டபோதும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

தற்போது இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. மழைக்கான அறிகுறிகள் இல்லாத நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் மேலும் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையை நிலவும் என வானிலை மையம் மீண்டும் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, வேலூர் போன்ற மலையை ஒட்டிய பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகம் காணப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என்றும் அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும் என கூறப்பட்டிருகிறது. மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியாசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியாசாகவும் இருக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Also Read: 11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!