முக்கிய ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் திடீர் விரிசல்..! நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ்..!
வேலூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து ரயில்கள் செல்வது சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டன.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே இருக்கிறது மகேந்திரவாடி. இந்த ஊரில் இருக்கும் ரயில் நிலையம் அருகே நேற்று ரயில்வே பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரயில்நிலையத்தின் அருகே இருக்கும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக ரயில் நிலைய மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உத்தரவுப்படி சோளிங்கபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பணியாளர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் இறங்கினர்.
அந்த சமயத்தில் சென்னை செல்வதற்காக திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், லால்பேட்டை எக்ஸ்பிரஸ் ஆகியவை வந்து கொண்டிருந்தன. அவை அனைத்தும் நடு வழியில் நிறுத்தப்பட்டன.
தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் சிலமணி நேரம் நீடித்தித்தது. அதன்பிறகு சென்னை நோக்கி சென்ற ரயில்கள் அனைத்தும் தாமதமாக கிளம்பிச் சென்றன. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஊர் போக முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.