வேலூர் அருகே தேர்தல் பணி மேற்கொள்ள சென்ற பறக்கும்படையினரின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் பெண் போலீஸ் அதிகாரி மாலதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது.காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடக்கும் உள்ளது. தேர்தலை முன்னிட்டு 1,05,372 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று தேர்தல் பணிகளை செய்வதற்காக வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி பறக்கும்படையினர் காரில் சென்றனர்.

அப்போது குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற லாரி பறக்கும் படையினரின் கார்  மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய பெண் காவலர் மாலதி( 37)  சம்பவ இடத்திலேயே  தலை நசுங்கி  உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த மற்ற 3 படுகாயமடைந்தனர்.  

இதனையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்த 3 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்த மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் கே.வி.குப்பம் காவல்துறையினர் தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.