வேலூர் மாவட்டம் காட்பாடியில் நேற்று குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் ஓட்ட பந்தயம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் விழாவில் கலந்து கொண்டிருந்தார். பலர் திரண்டிருந்த கூட்டத்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நின்று அங்கிருப்பவர்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அதை கண்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் கூறி அந்த பெண்ணை அழைத்து வர சொன்னார்.

பிச்சை எடுத்த பெண்ணிடம் ஆட்சியர் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். அவர் பெயர் மல்லேஸ்வரி என்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறியிருக்கிறார். குழந்தையை வாடகைக்கு பெற்று வந்து அவர் பிச்சை எடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை பெற்று காப்பகத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தர விட்டார்.

அதன்படி மல்லேஸ்வரியிடம் இருந்து குழந்தை பெறப்பட்டு சமூக நலத்துறை மூலமாக வேலூர் அல்லாபுரத்தில் இருக்கும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்பெண்ணும் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறை மூலமாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட விழா அருகிலேயே பெண் ஒருவர் குழந்தையை வைத்து பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.