வேலூரில் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனை பெண் செவிலியர் கொரோனாவால் உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய பொதுமக்கள்..!
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது மிக வேகமாக பரவி வருகிறது. இதில், சிக்கி முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசி (33). இவரது கணவர் விபத்தில் உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். எழிலரசி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கொரோனா மற்றும் பொது வார்டுகளில் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு எழிலரசிக்கு திடீரென காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. பின்னர், அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எழிலரசி மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட எழிலரசி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு மருத்துவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரையும் சிகிச்சைகாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.