வேலூர் மாவட்டம்  நாற்றம்பள்ளி அடுத்து இருக்கிறது அலசந்தாபுரம் கிராமம் . இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் தனியார் நிலங்கள் இருக்கின்றன . இறந்து போனவர்களின் உடல்களை சாதியை காரணம் காட்டி அந்த வழியாக கொண்டு செல்ல நில உரிமையாளர்கள் அனுமதி மறுத்துள்ளதாக தெரிகிறது .

இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார் . இதனால் அவருக்கு இறுதிச்சடங்குகளை செய்வதற்காக உடலை சுடுகாட்டிற்கு கிராம மக்கள் கொண்டு சென்றுள்ளனர் .அப்போது தனியார் நிலம் வழியாக செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது . பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது .

இதனால் கிராம மக்கள்  குப்பனின் உடலை ஒரு தொட்டிலில் கட்டி , அதை பாலத்தில் தொங்க விட்டு கீழே இறக்கி உள்ளனர் . அதன்பிறகு உடலை சுமந்து சென்று சுடுகாட்டில் எரியூட்டியுள்ளனர் .

சாதியை காரணம் காட்டி , இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது .