தமிழகத்தில் 40ஐ எட்டிய கொரோனா பாதிப்பு..!
தற்போது மேலும் இருவருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருக்கிறது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இதுவரையில் 800க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை 19ஐ எட்டியிருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மதுரையில் அண்மையில் கொரோனாவால் உயிரிழந்த முதியவர் ஒருவரின் குடும்பத்தினருக்கும் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருக்கிறது.
கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சில நாட்களுக்கு முன் மேற்கிந்திய தீவுகளில் இருந்து தமிழகம் திரும்பினார். அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அதேபோல வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த 49 வயது நபர் ஒருவர் பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.