பெண் காவலருக்கு கொரோனா... வாணியம்பாடி காவல் நிலையத்துக்கு சீல்..!
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா உறுதியானதையடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா உறுதியானதையடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று புதியதாக 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கொரோன தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவலர்களுக்கு கொரோனா பரவியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர முழுவதும் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இந்நிலையில், வாணியம்பாடி பெண் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருடன் பணியாற்றிய 43 காவலர்கள் தற்போது தனியார் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாணியம்பாடி பெண் ஆய்வாளர் பணியாற்றிய காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், அவர் தங்கியிருந்த செட்டியப்பணுர் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் காவலர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.