Asianet News TamilAsianet News Tamil

வேலூரில் மினி டைட்டல் பூங்கா; அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை  சார்பில் வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் மினி டைடல்  பூங்கா  அமைப்பதற்கு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

cm mk stalin stone laid for mini tidel park in vellore district
Author
First Published Feb 18, 2023, 1:44 PM IST

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. 

வேலூர் மாவட்டத்தில்  மினி டைடல் பூங்கா
2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை  நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கிணங்க, முதற்கட்டமாக விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.6.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். 

அதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டம், மேல்மொனவூர்-அப்துல்லாபுரத்தில் அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் மினி டைடல்  பூங்கா  அமைப்பதற்கு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  தரை மற்றும் நான்கு தளங்களுடன் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கான கட்டடத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார். 

இதன்மூலம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தங்கி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன், சமூக பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.

ஓலா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஓலா எலக்ட்ரிக் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) பிரைவேட் லிமிடெட் மற்றும் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) பிரைவேட் லிமிடெட் மூலமாக முதற்கட்டமாக, மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின் வாகன உற்பத்தி ஆலை நிறுவ முன்வந்துள்ளது.  இத்திட்டத்தில், உறுதி செய்யப்பட்ட முதலீடு 7,614 கோடி ரூபாய் ஆகும். இதில்  ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) நிறுவனம் 5,114 கோடி ரூபாயும்,  ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) நிறுவனம் 2,500 கோடி ரூபாயும் முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும்.  இத்திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பர்கூர் தொழிற் பூங்காவில் நிறுவப்பட உள்ளது.  இதன்மூலம் 1.40 லட்சம்    நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கு  இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது. 

ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் (Inox Air Products)  
ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், நாடு முழுவதும் 43 இடங்களில் மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு  தேவைப்படும் வாயு உற்பத்தி மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம்  முதன்முதலாக, 1986ம் ஆண்டு சென்னையில் உள்ள மணலியில் வாயுக்கள் பிரிப்பு ஆலை ஒன்றை தொடங்கியது.  அதற்குப் பிறகு, சேலம், திருநெல்வேலி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொண்டது.  இந்நிறுவனம், 4.5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட  நூற்றுக்கும் மேற்பட்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜன் தொட்டிகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்நிறுவனம் தொடர்ந்து இயங்கி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் திரவ ஆக்ஸிஜன் தங்கு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்தது. தற்போது, 150 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 105 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம்,  சிப்காட் ஓசூர் தொழிற்பூங்காவில், இந்நிறுவனம் நிறுவியுள்ள புதிய 200 TPD  திறன்கொண்ட  அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். 

இந்நிறுவனம், சிப்காட் ஓசூர் தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு உட்பட அனைத்து அனுமதிகளும் பெற்றிட தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம்  ஒற்றைச்சாளர இணையம்  மூலம் ஆதரவுச் சேவைகள் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

GX குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் 
GX குழுமம், ஃபைபர் – டு – தி – ஹோம் (Fibre-to-the-Home – FTTH) துறையில் ஐரோப்பிய சந்தைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும்.  சுமார் 20 ஆண்டுகளாக FTTH தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிறுவனம், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 110 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 100 உயர்தர தொழில்நுட்ப பொறியியல் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைத்திட, தமிழ்நாடு அரசுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, குறுகிய காலத்திலேயே சென்னை, துரைப்பாக்கத்தில் 110 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள GX குழுமத்தின்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள் திறந்து வைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios