வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இருக்கும் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் கண்ணன்(32). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் சொந்தமாக கார் ஒன்று வைத்துள்ளார். நேற்று தனது காரில் அலமேலுமங்கைபுரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரை ஓட்டிச் சென்றுள்ளார்.

வேலூர் அருகே இருக்கும் பழைய பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் முன்னே லாரி ஒன்று வேகமாக சென்றுள்ளது. அதை முந்திச்செல்ல ரமேஷ் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி மீது கார் உரசியது. இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற கார், பாலத்தின் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி பாலாற்றில் பாய்ந்தது. கார் ஆற்றுக்குள் விழுந்ததில் அப்பளம் போல நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக ரமேஷ் கண்ணன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றுக்குள் இறங்கி காயமடைந்த ரமேஷை மீட்டு முதலுதவி அளித்தனர். தகவலறிந்து வந்த காவலர்கள் மேல்சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பாலத்தின் தடுப்புச்சுவர்கள் சேதமடைந்திருந்ததால் அண்மையில் தான் 4 கோடி மதிப்பீட்டில் மேம்ப்படுத்தப்பட்டது. ஆனாலும் அவை தரமானதாக இல்லாத காரணத்தாலேயே விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.