நாமக்கல் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

வேலூர் மாவட்டம், முஞ்சூர்பட்டு மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்த சக்கரை என்பவரின் மகன் அசோக்குமார் (37). பொறியாளரான, இவர் திருச்சி மாவட்டத்தில் பொதுப்பணித் துறையில், பாசன ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர், திருச்சி டோல்கேட் சாய்நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் தனது மனைவி தேவிபிரியா (35), மகன் சாய்கிருபா (3), மாமனார் கோவிந்தன் (72), மாமியார் ராஜாமணி (68) ஆகியோருடன் ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்றுவிட்டு, காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அசோக்குமார் ஓட்டி வந்தார்.

இந்த கார் நேற்று மாலை 4 மணி அளவில் நாமக்கல்லை அடுத்த ரெட்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த பருப்பு மூட்டை லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் அப்பளம் போல் கார் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த அசோக்குமார் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கோவிந்தன் உள்ளிட்ட 4 பேரின் சொந்த ஊர் திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு லாரியில் பருப்பு லோடு ஏற்றி வந்ததும், ஓட்டுநர் த‌‌ஷ்தகிரி (50) லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு சமையல் செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஓட்டுநர் த‌‌ஷ்தகிரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.