வேலூரில் தொழிலதிபர் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையர்கள் 50 பவுன் நகைகள், பணத்தை திருடிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை தக்கடி தெருவை சேர்ந்தவர் பாரூக் (50). இவர் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 1-ம் தேதி குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் வெளியே பூட்டு உடைக்கப்பட்டதோடு, வீட்டுக்குள் இருக்கக்கூடிய அறைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், எல்இடி டிவி, மைக்ரோ ஓவன், டூவிலர், கைக்கடிகாரம் ஆகியவை திருடப்பட்டது தெரிந்தது. 

அத்துடன் முக்கியமாக சமையலறைக்கு சென்று கொள்ளை கும்பல் காய்கறிகளை நறுக்கி மக்ரூனி சமைத்து சாப்பிட்டு விட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். 

ஆம்பூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.