வேலூரில் அதிர்ச்சி.. கொரோனாவில் இருந்த மீண்டவரின் உயிரைப் பறித்த கருப்பு பூஞ்சை..!
வேலூரில் கொரோனாவில் இருந்து மீண்டு கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் கொரோனாவில் இருந்து மீண்டு கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் பரவி வந்த கருப்பு பூஞ்சை தொற்று கடந்த சில நாட்களாகவே தமிழகத்திலும் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது. பின்னர், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிஎம்சி மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரின் இடது கண் பாதிக்கப்பட்டது. அந்த கண்ணை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
இந்நிலையில், நேற்று அவர் திடீரென உயிரிழந்து விட்டார். அவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். கருப்பு பூஞ்சைக்கு ஒருவர் வேலூரில் பலியான சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.