வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் கல்லுக்குட்டைச் சேர்ந்தவர் அரசன்(27). ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு கொய்யா பழங்களை ஏற்றிக்கொண்டு ஒடுக்கத்தூரில் இருந்து வந்து கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது அதே சாலையில் கார் ஒன்று வேகமாக ஆட்டோவின் பின்னால் வந்துள்ளது.

எதிர்பாராத விதமாக ஆட்டோவின் பின்பக்கத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய ஆட்டோ, தாறுமாறாக சென்று சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல நொருங்கவே அதில் லோடு ஏற்றி வந்த ஓட்டுநர் அரசன் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக பலியானார்.

அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த விரிஞ்சிபுரம் காவலர்கள் உயிரிழந்த அரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.