வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 11 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் மீது ரயில் மோதியது. இதில் மூன்று பேரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் தினசரி அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக இங்கு ரயில்வே கேட் இருந்தும் கூட மக்கள் விதிகளை மீறி தண்டவாளத்தில் இறங்கி அதை கடப்பது வழக்கம். ரயில்வே நிர்வாகம் பல முறை எச்சரிக்கை தெரிவித்தும் மக்கள் தொடர்ந்து விதிகளை மீறி இப்படி தண்டவாளத்தை கடப்பது நடந்து வருகிறது. 

இந்நிலையில் வேலூர் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்தவர் சங்கர். தனியார் காலணி தாயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தனது சகோதரி பானுமதி மற்றும் 11 வயது பேரன் நித்தீஷ் ஆகியோருடன் சென்னை செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்பூர் ரயில் நிலையம் வந்தனர். ஒன்றாவது நடைமேடையில் இருந்த அவர்கள் அங்கிருந்து இறங்கி 2-வது நடைமேடைக்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றனர். 

அப்போது அதிவேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று 3 பேர் மீது மோதியது. இதில் 3 பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தனர். அதிகாலை வேலை என்பதால் இந்த விபத்தை யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து உடல்கள் சிதறி கிடப்பதை பார்த்த மக்கள் உடனே ரயில் நிலைய மேலாளருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் சடலங்களை கைப்பற்றினர். அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.