ராணிபேட்டையில் கல்குவாரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி; 10 மணி நேரம் போராடி உடல் மீட்பு
வாலாஜாபேட்டை அருகே கல்குவாரி குட்டையில் நீச்சல் தெரியாமல் குளித்து நீரில் மூழ்கிய பள்ளி சிறுவனை 10 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் சடலமாக மீட்டெடுத்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். தற்போது குடும்பத்துடன் சென்னையில் உள்ள போரூர் பகுதியில் உள்ள தனியார் தங்க நகை கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கோகுல் பிரசாத் (வயது 14) சென்னையில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மே மாத பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் வெங்கடேசன் குடும்பத்துடன் அவர்கள் சொந்த ஊரான எடக்குப்பம் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது கோகுல் பிரசாத் கிராம பகுதியில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து பழைய கல்குவாரி குட்டைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். பின்னர் குட்டையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த சக நண்பர்களை பார்த்து நானும் குளிக்கிறேன் என்று தண்ணீர் குட்டையில் கோகுல் பிரசாத் குதித்து உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியமால் தண்ணீருக்குள் மூழ்கினார். இதனை கண்ட சக நன்பர்கள் பார்த்து பயந்து கிராம பொது மக்களிடம் சென்று தெரிவித்தனர். இதுகுறித்து கிராம பொதுமக்கள் உடனடியாக வாலாஜாபேட்டை காவல் நிலையம் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குட்டையில் மூழ்கி கிடந்த சிறுவனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தேடி நீண்ட நேரமாகியும் கிடைக்காததால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) வருகை தந்து இரவு நேரம் மற்றும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தண்ணீர் குட்டையில் இறங்கி சுமார் 10 மணி நேர தேடுதலுக்கு பின்னர் சிறுவன் நீரில் அடியில் மூழ்கி சடலமாக கிடந்த உடலை மீட்டெடுத்தனர்.
அதைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.