திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓம்சக்தி கோவில் இருக்கிறது. அதன் அருகே இருக்கும் குப்பைத்தொட்டியில் நேற்று அதிகாலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத காரணத்தால் நீண்ட நேரமாக குழந்தை கொட்டும் பனியில் நனைந்து அழுதுள்ளது. தொடர்ந்து குழ்நதையின் அழுகுரல் கேட்கவே 5 மணியளவில் அந்த பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் குப்பை தொட்டி அருகே சென்று பார்த்துள்ளார்.

அங்கு 7 மாத பெண்குழந்தை ஒன்று கிடந்தது. எறும்பு மற்றும் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டு குழந்தை அழுது கொண்டிருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி, உடனடியாக குழந்தையை தூக்கி ஆசுவாசப்படுத்தினார். பின்னர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவலர்கள் குழந்தையை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பின்னர் திருப்பத்தூரில் இருக்கும் குழந்தைகள் நல காப்பக நிர்வாகிகளிடம் குழ்நதை ஒப்படைக்கப்பட்டது. பச்சிளம் பெண்குழந்தையை ஈவு இரக்கமின்றி குப்பை தொட்டியில் வீசிச்சென்றது யார் என காவலர்கள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். குழந்தை குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து காப்பகத்திலேயே குழந்தை பராமரிக்கப்படும் என காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.