வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போவதாக பேசப்பட்டு வந்தது. இது சம்பந்தமாக பல புகார்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆம்பூர் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது.

நேற்று ஆம்பூர் காவலர்கள் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக குல்பித்தின்(21 ) மற்றும் மணிகண்டன் (21 ) என்கிற இரண்டு வாலிபர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்தனர். எல்லோரிடமும் சோதனையிடுவது போல அவர்களிடமும் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் இருசக்கர வாகனத்திற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் பைக் திருடர்கள் என்பது தெரிய வந்தது. உடனடியாக இரு வாலிபர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

 கடந்த 6 மாதத்தில் 40 இருசக்கர வாகனங்களை இருவரும் சேர்ந்து திருடியது விசாரணையில் தெரியவந்தது. அவற்றை ஆந்திர மாநிலம் திருப்பதியில் விற்பனை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இரு வாலிபர்களையும் சிறையில் அடைத்தனர்.