தண்ணீர் பேரலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 4 வயது குழந்தை..! அஜாக்கிரதைகளால் தொடரும் குழந்தை மரணங்கள்..!
ஆம்பூர் அருகே தண்ணீர் பேரலில் தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருக்கிறது வீராங்குப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வீரமணி என்கிற செல்வபாண்டியன். இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். வீரமணி முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக இருந்துள்ளார். ரம்யா அருகே இருக்கும் வெங்கடேசமுத்திரம் தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல ரம்யா வேலைக்கு சென்று விட்டார். வீரமணியும் வெளியில் சென்றுவிடவே, குழந்தைகள் பாட்டியின் கண்காணிப்பில் இருந்துள்ளனர். இதனிடையே பாட்டி வீட்டில் துணி துவைத்து கொண்டு இருந்துள்ளார். அவரின் அருகே ரம்யாவின் இரண்டாவது குழந்தை யஷ்வந்திகா விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறார். துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக பாட்டி சென்றுள்ளார்.
அப்போது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை யஷ்வந்திகா தண்ணீர் பேரலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே யஷ்வந்திகா பலியாகி இருக்கிறாள். திரும்பி வந்த பாட்டி, குழந்தையை தேடி இருக்கிறார். தண்ணீர் பேரலில் யஷ்வந்திகா கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திருச்சியில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்குள் மீண்டும் குழந்தைகள் அஜாக்கிரதையால் பலியாகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.