வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வராவ். இவரது மனைவி தீபலட்சுமி. இந்த தம்பதியினருக்கு திவிஷா என்கிற 3 வயது மகள் இருக்கிறாள். சிலம்பம் மாஸ்டரான விக்னேஷ்வராவ் அப்பகுதி சிறுவர் சிறுமிகளுக்கு சிலம்ப பயிற்சி அளித்து வருகிறார். தனது மகளுக்கும் 2 வயது முதலே சிலம்ப கலையை கற்றுக்கொடுத்து வருகிறார்.

ஒற்றை, இரட்டை கம்பு பயன்படுத்தி சிலம்பம் பயின்று வரும் சிறுமி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளார். சிறுமியின் திறமைகள் குறித்து இந்திய சாதனை புத்தகத்திற்கு விக்னேஷ்வராவ் அனுப்பியுள்ளார். திவிஷாவின் சாதனைகளை பாராட்டி தங்கப்பதக்கமும் சான்றிதழும் வழங்கி அவர்கள் கௌரவித்தனர். மேலும் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான அடையாள அட்டையும் சிறுமிக்கு வழங்கப்பட்டது.

சிறுமி திவிசாவின் சாதனையை அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், திவிஷவை நேரில் அழைத்த பாராட்டினார். இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என அவர் சிறுமியை வாழ்த்தியுள்ளார்.