காவலரிடமே கைவரிசை காட்டிய கில்லாடி கொள்ளையர்கள்.. செல்போனை பறித்து தப்பி ஓட்டம்!!
வேலூர் அருகே பெண் காவலரிடம் செல்போனை திருடிய வாலிபர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது.
வேலூர் அருகே இருக்கும் வள்ளலாரில் வசித்து வருபவர் அஞ்சலி. வயது 27 . இவர் காவேரிப்பாக்கத்தை அடுத்து இருக்கும் அவளூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றி வருகிறார்.
தினமும் இவர் வேலைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று வந்திருக்கிறார். சம்பவத்தன்று மாலை 7 மணி அளவில் பணி முடித்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்திருக்கிறார். இருசக்கர வாகனத்தில் வரும் போது அவரது மொபைல் போனிற்கு அழைப்பு வந்திருக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு போனில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.
அப்போது அந்த வழியாக 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த அஞ்சலியிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அதனால் அதிர்ச்சி அடைந்த அஞ்சலி கூச்சல் போட்டிருக்கிறார். ஆனால் அதற்குள்ளாக அவர்கள் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து சத்துவாச்சேரி காவல் நிலையத்தில் அஞ்சலி புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் வேலூர் ஓல்டு டவுணைச் சேர்ந்த வசந்தகுமார்(22 ), குப்பு என்கிற அப்பு (29 ), ராகுல் (19 ) ஆகிய மூன்று வாலிபர்களை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை, அஞ்சலியின் செல்போனை அந்த வாலிபர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
காவல்துறை அதிகாரியிடமே இருந்து செல்போன் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.