Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் களைகட்டிய ஆடிப்பெருக்கு.. காவிரி கரையில் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்..

திருச்சி காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Aadi perukku 2023 : Trichy people celebrated aadi 18 special at cauvery river
Author
First Published Aug 3, 2023, 11:36 AM IST

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனிச்சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக, ஆடி மாதம் பல்வேறு சிறப்பு வாய்ந்தது ஆகும். கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு என்று நகரங்களும், கிராமங்களும் விழாக்கோலமாக ஆடி மாதத்தில் காணப்படுவது வழக்கம். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை என பல விசேஷ நாட்களை கொண்ட இந்த ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆடிப்பெருக்கு தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் ஆடி 18-ம் நாள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவரி டெல்டா மாவட்டங்களி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி ஆடிப்பெருக்கான இன்று திருச்சி ஸ்ரீரங்கம் காவேரி  அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்று பகுதியில் பொதுமக்கள், புதுமண தம்பதிகள் காவிரி தாய்க்கு பெரிய வாழை இலை போட்டு அதில் முக்கனி உள்ளிட்ட பல்வேறு வகையான பழ வகைகளை வைத்தும்,காப்பரிசி,காதாளை கருகமணி,முளைபாரி வைத்தும்,சுமங்கலி பெண்கள் தங்களுடைய கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டி கொண்டும் புதுமண தம்பதிகள்  தாலி பிரித்து கட்டும் வைபவங்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட மற்ற பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி-18 திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகர பகுதிகளில் அம்மா மண்டபம், கருடா மண்டபம்,  கீதாபுரம், சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை . காந்தி படித்துறை,  ஓடத்துறை,. அய்யாளம்மன் படித்துறைகளில் ஆடிபெருக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினர். இதே போல் காவேரி அம்மா மண்டபம் படித்துறையில் நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர் கொடுக்கும் நிகழ்வு இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. முன்னதாக நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் எழுந்தருளி மாலை காவிரி தாய்க்கு மாலை அணிவிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

ஆற்றுப் பகுதிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை முற்றிலும் தவிர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட நீரில் திருச்சி முக்கொம்பு விற்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.  

காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் ஆடிப்பெருக்கை பாதுகாப்பாக கொண்டாட காவல்துறை தீயணைப்பு துறை உள்ளிட்டடோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் .பொதுமக்கள் காவிரி ஆற்றில் கரைகளில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடலாம் ஆற்றினுள் இறங்கி குளிப்பதற்கு தடையும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி : இந்த முறை பூஜை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios