ஒரு மழைக்கு தாங்காத மாநகரம்...! வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி ..மக்களே உஷார்..!
இன்று காலை முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக , தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தொடந்து மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம் அடையும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி , காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதால் , தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களி மழை தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
புகழ்பெற்ற திருசெந்தூர் முருகன் கோவில் மழைநீர் புகுந்தது. கோயில் கிரிப்பிரகாரம், சண்முக விலாசம் பகுதிகள் மழைநீரில் மூழ்கின. இந்த பகுதிகளில் இருந்து மழைநீர் கோயிலுக்கு உள்ளேயும் வழிந்தோடியதால் பக்தர்கள் அவதியடைந்தனர். மேலும், கோயில் கடற்கரை பகுதியில் மணல் பரப்பு தெரியாமல் தண்ணீர் தேங்கியது. காயல்பட்டினம், குலசேகரபட்டினம், உடன்குடி, சாத்தான்குளம்,ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. சுமார் 3 மணி நேரத்தில் திருசெந்தூரில் மட்டும் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக திருச்செந்தூர் நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சன்னதி தெரு, மார்க்கெட் பகுதி, போக்குவரத்துக் கழக பனிமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் குளம் போல தேங்கியுள்ளது. அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர்.
தொடர் மழையினால், காயல்பட்டினம் நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஸ்ரீவைகுண்டம், குலசேகரபட்டினம் உள்ளிட்ட பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால், பல இடங்களில் குடியுருப்பு பகுதிகள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் தூத்துக்குடி நகரில் பெய்த மழையால், தற்காலிக பேருந்து நிலையம், தருவை விளையாட்டு மைதானம் போன்றவை தண்ணீரில் மிதக்கின்றன. தூத்துக்குடி டூவிபுரம், தாளமுத்துநகர், சத்யாநகர், கால்டுவெல் காலனி, உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மேலும், குடியிருப்புகளை சூழந்து மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்கு உள்ளே முடங்கினர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் தூத்துக்குடி மாநகர பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி ரயில் நிலைய தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து பகல் 01.50 மணிக்கு தூத்துக்குடி வந்த விமானம், தரையிறங்க முடியாததால் திருச்சி திருப்பி அனுப்பப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழைபொழிவில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 246 மி.மீ மழை பெய்துள்ளது. அடுத்ததாக, திருச்செந்தூரில் 217மி.மீ அளவு மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் மொத்தம் 1599.10 மி.மீ. மழை பெய்துள்ளது. சராசரி மழை அளவை விட 19 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.