சாத்தான்குளம் சம்பவம் தொடரும் மர்மம்.. உடல்தகுதி சான்று கொடுத்த மருத்துவர் திடீர் விடுப்பு..வலுக்கும் சந்தேகம்
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ்க்கு மருத்துவ தகுதிச்சான்று வழங்கிய மருத்துவர் திடீரென 15 நாள் விடுப்பில் சென்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ்க்கு மருத்துவ தகுதிச்சான்று வழங்கிய மருத்துவர் திடீரென 15 நாள் விடுப்பில் சென்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை, மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியது போல சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையகளுக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டுமெனவும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
இதனிடையே, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இறந்த ஜெயராஜ், பென்னிக்சின் உடல்களில் மோசமான காயங்கள் இருந்ததால், காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது. முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் அடைக்க உடல்தகுதி சான்று அளித்த மருத்துவர் வெண்ணிலா திடீரென விடுப்பில் சென்றுள்ளது பல்வேறு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏற்கனவே 4 நாள் விடுப்பு எடுத்த நிலையில் தற்போது 15 நாட்களாக நீட்டிப்பு செய்துள்ளார். மருத்துவர் வெண்ணிலா அளித்த சான்றிதழ் அடிப்படையிலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறைக்கு அனுப்பபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.