சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அளித்துள்ள அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேரடியாக சென்று விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிவித்துள்ளார். அதில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்சை போலீசார் விடிய விடிய லத்தியால் அடித்தது தெரியவந்திருப்பதாக கூறியுள்ளார்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும்  விடிய விடியை லத்தியால் அடித்துள்ளனர். அவர்களை அடிப்பதற்கு பயன்படுத்திய லத்திகளை கேட்டபோது உன்னால் ஒன்றும் முடியாது என காவலர் மகாராஜன் முரணாகவும் ஒருமையிலும் பேசினார். மற்றொரு காவலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மீண்டும் மீண்டும் கேட்ட பிறகே காவலர்கள் லத்தியை கொடுத்தார்கள். 

இதுதவிர சாட்சியம் அளித்த பெண் காவலரை மிரட்டும் வகையில் போலீசார் நடந்துகொண்டனர்.  பெண் காவலர் ரேவதி தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது அச்சத்துடன் இருந்தார். உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தபிறகே அவர் சாட்சி ஆவணத்தில் கையெழுத்திட்டார். லத்தி மற்றும் மேஜையில் ரத்தக்கறை இருந்தது சாட்சியம் மூலம் தெரியவந்துள்ளது. ரத்தக்கறை மற்றும் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் தினமும் அழியும்படி செட்டிங் செய்யப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நடைபெற்றபோது கூடுதல் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பி ஆகியோர் அந்த இடத்தில் இருந்தபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் விசாரணையை பாதியிலேயே நிறுத்தி விட்டு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது என்று மாஜிஸ்திரேட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.