அட பாவிங்களா.. ஆசனவாயிலில் பீறிட்ட ரத்தம்.. இரவு முழுவதும் மிருகத்தனமான தாக்குதல்.. சிபிஐ அறிக்கையில் பகீர்.!
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவலர்கள் மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதாலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவலர்கள் மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதாலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக கூறி கடந்த ஜூன் 19-ம் தேதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போலீசார் அரங்கேற்றிய சித்ரவதைகளால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்த தகவல்கள் சில தற்போது வெளியாகியுள்ளது. அதில், தந்தை மகன் இருவரும் பொய்யான குற்றச்சாட்டில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இருவர் மீதும் சாத்தான்குளம் காவலர்கள் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலால் இருவருக்கும் உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
காவல்நிலையத்தின் கழிப்பறை சுவர்கள் லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் தந்தை-மகன் இருவரது ரத்தங்கள் படிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை மத்திய தடயவியல் துறையின் பரிசோதனைக்கு (CFSl) அனுப்பிய போது இந்த ரத்தக் கறைகள் இறந்துபோன தந்தை, மகன் டிஎன்ஏ உடன் பொருந்தியுள்ளது. இந்த ரத்த மாதிரி ஜெயராஜ் மனைவி செல்வராணியின் DNA உடனும் பொருந்துகிறது. இரவு முழுவதும் தாக்கப்பட்டதில் இருவரும் பலத்த காயம் அடைந்ததால், அதிகமான ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. கொடூரமாக தாக்கப்பட்ட காயங்களுடனேயே ரத்தத்தை தங்கள் உடையாலேயே 2 பேரும் துடைத்துள்ளனர்.
அதேபோல், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் வெண்ணிலா இவர்களை பரிசோதனை செய்தபோது அலட்சியமாக செயல்பட்டு இவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை சான்றிதழில் குறிப்பிடாமல் அலட்சியமாக செயல்பட்டது மட்டுமின்றி சிறைக்கு அடைக்க இவர்கள் தகுதியானவர் என தகுதி சான்றும் கொடுத்துள்ளார் என சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.