நாட்டு நலப்பணி திட்டம் மூலமாக சமூக மேம்பாட்டிற்கு வித்திட்ட தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியை முனைவர் ஞா. வான்மதிக்கு மாநில அளவில் சிறந்த நாட்டுநலப் பணித் திட்டஅலுவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.

நாட்டு நலப்பணி திட்டம் மூலமாக சமூக மேம்பாட்டிற்கு வித்திட்ட தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியை முனைவர் ஞா. வான்மதிக்கு மாநில அளவில் சிறந்த நாட்டுநலப் பணித் திட்டஅலுவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டு நலப்பணித்திட்டத்தில் இணைந்து மக்களுக்கு சேவை புரிந்ததைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு இவ்வுயரிய விருதை வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரி வேதியல் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் ஞா. வான்மதி. இவர் கல்லூரி பணியோடு சேர்ந்து பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறார். காமராஜ் கல்லூரியின் பெண்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 146-க்கு திட்ட அலுவலராக சிறப்பாக பணியாற்றினர்.

இவரது நாட்டு நலதிட்ட பெண்கள் அணியான பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளைச் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் பல்வேறு கிராமமேம்பாட்டுப் பணிகளில் இவர் தம் குழு சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. மேலும் தூத்துக்குடியில் உள்ள முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துள்ளார். நீர்நிலைகளைப் பாதுகாத்தல் குறித்த நிகழ்ச்சிகளை பல்வேறு கிராமங்களில் மேற்கொண்டுள்ளார்.

ரத்ததான முகாம், மருத்துவ முகாம், வெள்ள நிவாரணமுகாம், மரம் நடுதல் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளார். இவர் அணியில் உள்ள மாணவியரும் சிறப்பாகச் செயல்பட்டு பல்கலைக்கழக அளவில் சிறந்த நாட்டுநலப் பணித் திட்ட மாணவிக்கான விருதினைப் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்ட குழுமம் ஆகியவை இணைந்து மக்களுக்கு சேவை புரிந்ததைப் பாராட்டி சிறந்த திட்ட அலுவலர் விருது முனைவர் ஞா.வான்மதிக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பாடல் குழுமத்தின் நிதி உதவியுடன் தென் தமிழகத்தில் 50-க்கு மேற்பட்ட கிராமங்களை தேர்தெடுத்து , நன்நீர்நிலைகளை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டிருந்தார். மேலும் இவர் அணுசக்திதுறை நிதியுதவியுடன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பெற்றுள்ளளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுதில்லி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நிதியுதவியுடன் பல்வேறு இன்ஸ்பையர் அறிவியல் முகாம்களை நடத்தியுள்ளார்.