நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு நாட்களிலும் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப் பதிவுக்குப் பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது.விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை தற்போது வரை தொடர்கிறது. இந்தநிலையில் 10 ஓட்டுகள் மட்டுமே பெற்று பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பிச்சிவிளை ஊராட்சி. இங்கு தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதை அங்கிருக்கும் பிற சமூகத்தினர் எதிர்த்துள்ளனர். ஆனாலும் தேர்தல் நடைபெற்றது.

இதனால் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்து உள்ளனர். ஊராட்சியில் 6 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும் அவர்கள் போட்டியிடவில்லை. தலைவர் பதவிக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி மற்றும் சுந்தரி ஆகிய இருவரும் போட்டியிட்டனர். அப்பகுதியில் இருந்தவர்கள் தேர்தலை புறக்கணித்ததால் 13 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அதில் ராஜலட்சுமி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.