கெத்துக்காக இப்படிலாமா செய்வீங்க? கொத்தாக அள்ளிச்சென்ற காவல்துறை
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் அரிவாளுடன் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுடலைமணி மகன் கணேச மூர்த்தி. இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கணேச மூர்த்தி கையில் அரிவாளுடன் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் கிடைத்தும் உடனே தனிப்படை காவல் துறையினர் கணேச மூர்த்தியை கைது செய்து, அவரிடமிருந்து அரிவாளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கடம்பூர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கணேசமூர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தது குறித்து அதே ஊரைச் சேர்ந்த சேகர் என்பவர் கேட்டதற்கு, அவருக்கு கணேசமூர்த்தி கொலை மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.