தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருக்கும் பங்களா தெருவைச் சேர்ந்தவர் சண்முகத்தாய். வயது 75. இவரது மகன் சீனி. கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்ட நிலையில் மகனுடன் சண்முகத்தாய் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே வயது மூப்பு காரணமாக மூதாட்டி சண்முகத்தாய் நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை சீனி சரிவர கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. நோய் முற்றிய நிலையில் சண்முகத்தாயை வீதியில் போட்டுச் சென்றுள்ளார் சீனி. கடந்த 1 வாரமாக வெயிலிலும் மழையிலும் காய்ந்தும் நனைந்தும் மூதாட்டி சண்முகத்தாய் அவதிப்பட்டு வந்துள்ளார். இரண்டு நாட்களாக உணவும் அருந்தாமல் பட்டினியில் கிடந்திருக்கிறார். இதுபற்றி அந்த பகுதியில் இருந்தவர்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த வருவாய்த்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மூதாட்டியை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பிறகு பாண்டவர் மங்களத்தில் இருக்கும் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் வயதான காலத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் வீதியில் வீசிசென்ற மகன் சீனி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.