காலை உணவு திட்டத்தில் சாதிய பாகுபாடு? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி
காலை உணவு திட்டத்தில் பட்டியல் இன பெண் சமைத்த உணவை உண்ணக் கூடாது என்று மாணவர்களை பெற்றோர் கட்டாயப்படுத்திய பள்ளியில் எம்.பி. கனிமொழி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 11 மாணவர்கள் படித்து வருகின்றனர். முதல்வரின் காலை உணவு திட்டம் அண்மையில் இந்த பள்ளிக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த முனியசெல்வி பணியமர்த்தப்பட்டார். ஆனால், அப்பெண் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவர் சமைக்கும் உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று குழந்தைகளின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் எடுத்துக் கூறியும் பெற்றோர் அதனை ஏற்பதாக இல்லை. இதனைத் தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து எங்கள் குழந்தைகள் காலை உணவை சாப்பிடுவார்கள் என்று பொதுமக்கள் உறுதி அளித்தனர்.
வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி; அமைச்சரின் உதவியாளர் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்நிலையில், அப்பள்ளியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட கனிமொழி, சத்துணவு சமைத்து கொடுக்கும் முனிய செல்வியை சந்தித்து மனஉறுதியுடன் பணியை தொடருமாறு நம்பிக்கை அளித்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் இனி எங்கள் பகுதியில் சாதிய பாகுபாடு இருக்காது என்று உறுதி அளித்தனர்.